About Ganesh Chathurthi

உருவத்திற்கு உட்படுத்த முடியாத கடவுளான விநாயகர் பக்தர்களின் நலனுக்காக அற்புத வடிவம் தாங்கி நிற்கிறார். கணம் என்பது ஒரு குழுவைக் குறிக்கும். இந்த பிரபஞ்சமே அணுக்கள் மற்றும் வெவ்வேறு ஆற்றலின் கூட்டம்தான். வெவ்வேறு விதமான இந்த கூட்டங்களை நெறிப்படுத்த மேலான ஒரு விதிமுறை இல்லாவிட்டால் பிரபஞ்சமே குழப்பத்தில் ஆழ்ந்து விடும். இந்த அணுக்கள் மற்றும் ஆற்றல் கூட்டத்தின் தலைவர்தான் கணேசர். அந்த மேலான சக்திதான் அனைத்திலும் வியாபித்திருந்து உலகத்தை ஒழுங்குபடுத்துகிறது.

கணேசர் குறித்த தத்துவத்தை ஆதி சங்கரர் மிக அழகாக எடுத்துரைக்கிறார். யானைமுகம் கொண்ட கடவுளாக கணேசர் குறிக்கப்பட்டாலும் கூட அவர் உருவங்களை கடந்த பரம்பொருள் அவர் "அஜம் நிர்விகல்பம் நிராகாரமேகம்". அதாவது கணேசர் பிறப்பில்லாதவர் (அஜம்), குணபேதமற்றவர் (நிர்விகல்பம்) மற்றும் உருவமற்றவர் (நிராகாரம்) அவர் எங்கும் வியாபித்திருக்கும் பிரக்ஞையின் உருவகம். இந்த பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியதோ, எங்கே ஒடுங்குகிறதோ அந்த ஆதார சக்திதான் விநாயகர்.

நம் அனைவருக்கும் எப்படி விநாயகருக்கு யானைத்தலை கிடைத்தது என்பது பற்றிய புராணக் கதை தெரியும். சிவனும் பார்வதியும் மகிழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பார்வதி அசுத்தம் அடைகிறாள். இதை உணர்ந்த பார்வதி, அந்த அழுக்கை தனது உடலில் இருந்து அகற்றி அதை ஒரு சிறுவனாக படைத்து, அச்சிறுவனை தான் குளிக்கச் செல்வதால் தனக்கு காவலாக இருக்கச் சொல்லிப் பணிக்கிறாள். சிவபெருமான் திரும்பியபோது அவர் இன்னார் என்று சிறுவன் அறியாத காரணத்தினால் அவரை உள்ளே போக விடாமல் தடுக்கிறான். ஆகவே சிவபெருமான் சிறுவனின் தலையை கொய்து விட்டு உள்ளே நுழைகிறார். இதைக் கண்ட பார்வதி அதிர்ச்சி அடைகிறாள். அந்த சிறுவன் தங்களது மகன்தான் என்பதை பார்வதி எடுத்துரைக்கிறாள். மேலும் எவ்வாராயினும் அச்சிறுவனை உயிர்ப்பிக்க வேண்டும் என பிரார்த்திக்கிறாள். உடனே சிவபெருமான் தனது கணங்களை அழைத்து வடதிசையில் யார் தலை வைத்து படுத்திருக்கிறாரோ அவரது தலையை கொண்டுவர பணிக்கிறார். சிவ கணங்கள் வடக்கே தலை வைத்து படுத்திருந்த ஒரு யானையின் தலையை கொண்டு வந்து கொடுத்ததனால் சிவபெருமான் அத்தலையை சிறுவனின் உடலில் பொருத்துகிறார்.

இந்தக்கதை உங்களுக்கு வியப்பளிக்கிறதா? ஏன் பார்வதியின் உடலில் அசுத்தம் ஏற்பட்டது? எல்லாம் தெரிந்த சிவபெருமானுக்கு தன் பிள்ளையையே தெரியாதா? அமைதியின் திருவுருவமான சிவபெருமான், ஆத்திரமடைந்து தன் பிள்ளையின் தலையை தானே கொய்வாரா? கொய்த பிறகும், ஏன் யானைத் தலையைப் பொருத்த வேண்டும்? இதில் எல்லாம் ஆழ்ந்த பொருள் இருக்கின்றது.

பார்வதி, கொண்டாட்டத்தின் உருவகம். பார்வதி அசுத்தம் அடையக்கூடும் என்பது கொண்டாட்டமானது ரஜோ குணத்தையோ, நிதானமின்மையோ ஏற்படுத்தி ஒருவரை நிலை குலையச் செய்துவிடும் என்பதை குறிக்கிறது. அசுத்தம் என்பது அறியாமையின்

அடையாளம். கள்ளம் கபடமற்ற தன்மை, அமைதி மற்றும் அறிவு ஆகியவற்றின் அடையாளமே சிவபெருமான். சிவனின் பாதையை சிறுவன் தடுத்தான் என்பது தலை கனத்தினால் அறியாமை, அறிவின் பாதையை தடுக்கிறது என்று பொருள். பின்னர், அறிவானது அறியாமையை வெல்கிறது என்பதன் உருவகமே சிவபெருமான் சிறுவனின் தலையைக் கொய்தார் என்ற நிகழ்ச்சி.

ஏன் யானைத்தலை? யானையானது ஞான சக்தி மற்றும் கர்ம சக்தி ஆகிய இரண்டின் உருவகம். ஞானம் மற்றும் சர்வ சாதாரணமாக செயல்படுதல் ஆகியவை யானையின் குணங்களாகும். யானையின் பெருந்தலை அதன் ஞானத்தையும் அறிவையும் குறிக்கும். யானை தடைகளை கண்டு விலகிச் செல்லாது. அவற்றை உடைத்தெரிந்து சர்வ சாதாரணமாய் முன்னேறக் கூடியது. ஆகவே நாம் விநாயகரை துதிக்கும்போது யானையின் நற்குணங்கள் நம்மிலும் தூண்டப்படுகின்றன.

விநாயகரின் பெரு வயிறு பெருந்தன்மையையும், எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும் குணத்தையும் வெளிப்படுத்துகிறது. விநாயகரின் தூக்கிய திருக்கரம் "அஞ்சாதே – நான் உனக்கு அபயம் அளிக்கிறேன்" என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. வெளிப்புறமாக கீழ் நோக்கி இருக்கும் திருக்கரங்கள், முடிவற்ற வரங்கள் தருவதையும், பணிந்து நட என்பதையும் உணர்த்துகின்றன. விநாயகரின் ஒற்றைத் தந்தம் வாழ்வில் ஒரே குறிக்கோள் தேவை என்பதை தெளிவாக்குகிறது. அவர் கையில் இருக்கும் ஆயுதங்களான அங்குசம்

மற்றும் பாசம் ஆகியவை முறையே விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டின் அவசியத்தை தெரிவிக்கின்றன. கட்டுப்பாடு இல்லாத விழிப்புணர்வால் எந்தவித பயனும் இல்லை.

யானைத் தலையை உடைய விநாயகர் பயணம் செய்ய ஏன் இத்தனை சிறிய சுண்டெலி? இது ஒரு முரண்பாடு அல்லவா? இதிலும் ஒரு பெரிய தத்துவம் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. எப்படி சுண்டெலி வலைகளை அறுத்து விடுகிறதோ, அதேபோல் அடுக்கடுக்கான அறியாமைகளினால் பின்னப்பட்ட வலையை மந்திர சக்தி மூலம் நாம் அறுத்து விட்டால் விநாயகரால் வெளிப்படுத்தப்படும் ஞானத்தை உணரலாம்.

நமது பண்டைய ரிஷிகள் பல்வேறு தெய்வீக தத்துவங்களை வார்த்தைகளால் வெளிப்படுத்தாமல் உருவகமாக வெளிப்படுத்தியின் காரணம், வார்த்தைகள் மாறலாம். ஆனால் உருவகங்கள் மாறாதவை என்பதே. இந்த ஆழ்ந்த உருவகத்தை நாம் மனதில் நிறுத்துவோம். யானைமுகக் கடவுளாக எங்கும் வியாபித்திருக்கும் இந்த சக்திதான் நமக்குள்ளும் உறைந்திருக்கிறார் என்பதை உணருவோம். இந்த ஞானத்துடன் விநாயகர் சதுர்த்தி விழாவை நாம் கொண்டாடுவோம்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர், நிறுவனர் ‍ வாழும் கலை இயக்கம்

Comments

Popular posts from this blog

Sundara Kandam. A commentary Chapters 48-54

My encounters with his holiness Kanchi Paramacharya